குடும்பமே, சற்று விலகி இரு என்றார்கள்!

குடும்பமே, சற்று விலகி இரு என்றார்கள்!
Published on

“எனக்கு இந்த இயக்கத்தில் கொடுத்த வாய்ப்பை என்னுடைய வாரிசுக்குக் கொடுங்கள்'' - இந்தக் குரல் எழாத இயக்கங்களே தமிழகத்தில் இல்லை என்கிற அளவுக்கு தமிழகத்தில் தலைதூக்கி நிற்கிறது வாரிசு அரசியல் மனோபாவம். தேசிய இயக்கங்களிலிருந்து, மாநிலம் மற்றும் சாதிய அமைப்புகள் வரை வாரிசுக்குணம் அவற்றின் இயல்புகளில் ஒன்றாக மாறிவிட்டது. சரி, தமிழகத்தில் இந்த வாரிசுத் திணிப்பை மறுத்தவர்கள் இல்லையா என்று கேட்டால் அதற்கும் விரிவான பதிலை இங்கு பதிவு செய்யமுடியும். தவிர்க்க முடியாத ஆளுமையாக தமிழகத்தில் விளங்கிய பெரியார் திராவிடர் கழகப் போராட்டங்களில் தன்னுடைய மனைவியையும்,, தங்கையையும் ஈடுபடுத்தினாலும், மணியம்மையிடம் சில பொறுப்புகளை ஒப்படைத்தாலும் தன்னுடைய உறவினர்களை இயக்க வாரிசாக அறிவிக்கவில்லை. இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரலாகவும், சென்னை மாநில முதல்வராகவும் பொறுப்பு வகித்த ராஜாஜிக்கு மூன்று ஆண்களும், இரண்டு பெண் வாரிசுகள் இருந்தும் அவர்களை ஒருபோதும் அரசியலுக்குள் நுழைக்கவில்லை.

1959ல் இவர் துவக்கிய சுதந்திராக் கட்சியிலும் அவருடைய குடும்பத்தினரின் தலையீடு இல்லை. சென்னையிலுள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு ‘சத்தியமூர்த்தி பவன்' என்று பெயர் சூட்டுமளவுக்கு காங்கிரஸ் இயக்கத்தில் பல்வேறு பொறுப்புகளை வகித்த சத்தியமூர்த்தி 55 - ஆவது வயதில் சென்னை பொதுநல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு இறந்தார். அவர் தன்னுடைய வாரிசுகளை அரசியலுக்குள் நுழைக்கவில்லை.

நீதிக்கட்சியின் ஆட்சியின்போது தமிழக முதல்வராகப் பதவி வகித்த தலைவர்களும், காங்கிரஸ் முதல்வர்களும் தங்களுடைய வாரிசுகளை அரசியலில் நுழைக்கும் எண்ணம் கொண்டவர்களாகவே இல்லை என்பதை அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையே சொல்லிக் கொண்டிருக்கிறது. பதினேழு வயதில் காங்கிரஸில் நுழைந்து மாநிலத்தலைவராகி, ஒன்பது ஆண்டுகள் தமிழக முதல்வராகித் தமிழகத்தில் தொழில் மற்றும் விவசாயப்புரட்சிக்கு வித்திட்ட காமராஜர் திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதோடு தன்னுடைய உறவினர்களுக்குத் தன்னுடைய ஆட்சிக்காலத்தில் சிறு சலுகைகள் கூடத் தரப்படக்கூடாது என்பதில் கடுமை காட்டியவர். தன்னுடைய தாய்க்குச் சலுகை தர முற்பட்டபோது அதைத் தீவிரமாக எதிர்த்தவர். அவருடைய உறவினர்கள் யாரும் காங்கிரசின் முக்கியப்பொறுப்புகளுக்கு வரவும் இல்லை.

காமராஜருடைய அமைச்சரவையில் உள்துறை உள்ளிட்ட பல முக்கியப் பொறுப்புகளை வகித்தவரான கக்கன் மேலூரை அடுத்துள்ள கிராமத்தில் வசித்த தன்னுடைய குடும்பத்தினருக்குச் சலுகைகள் வழங்குவதை இறுதிவரை எதிர்த்து மிகச்சாதாரண வாழ்க்கை வாழ்ந்தவர். அவருடைய வாரிசுகள் யாரும் அரசியலில் தீவிரமாக இயங்க அவர் விரும்பவில்லை. ‘தோழர் ஜீவா' என்றழைக்கப்பட்ட ப.ஜீவானந்தம் தமிழகத்தில் பொதுவுடமைக்கட்சியின் முகமாகத் திகழ்ந்தவர். சட்டமன்றத்தில் தமிழில் பேசி அதிர்வை ஏற்படுத்தியவர். மகத்தான பேச்சாள ராகவும், தலைவராகவும் எளிமையாக வாழ்ந்து மறைந்த அவருக்கு நான்கு வாரிசுகள் இருந்தும் அவர்களை அரசியல் களத்தில் அவர் புகுத்தவில்லை. 1949ல் தி.மு.க.வை உருவாக்கியதோடு ஏகப்பட்ட தம்பிகளை உருவாக்கிய சி.என்.அண்ணாதுரை தி.மு.க வை ஆட்சியில் அமர்த்திய இரண்டு ஆண்டுகளில் உயிர் துறந்தவர்.

மிகுந்த செல்வாக்குடன் இருந்த அவருக்குக் குழந்தைகள் இல்லாததால் சிலரைத் தத்தெடுத்து வளர்த்தவர். இருந்தும் அவர்களை அரசியலில் நுழைய அவர் விரும்பவும் இல்லை. அவரால் வளர்க்கப்பட்ட வாரிசுகளில் ஒருவர் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்குப் போனது ஒரு சோகம்! கதாநாயகனாகி உச்சநட்சத்திரமாகி அரசியலில் நுழைந்து தி.மு.க.வின் பொருளாளர் ஆகி, அ.தி.மு.க.வைத் துவக்கி பத்தாண்டுகள் தொடர்ந்து முதல் அமைச்சராக இருந்தவரான எம்.ஜி.ஆருக்கு வாரிசுகள் இல்லாவிட்டாலும், அவருடைய உறவினர்களில் சிலர் அதிகாரத்தில் தலையிட்டபோது அதை எதிர்த்துக் கடுமையான அறிக்கையை வெளியிட்டார். அவருடைய குடும்ப உறுப்பினர்கள் அரசியலில் நுழைவதை இறுதிவரை அவர் ஆதரிக்கவே இல்லை. தி.மு.க, காங்கிரஸ், ஜனதா போன்ற கட்சிகள் மூலமும், தமிழக முன்னேற்ற முன்னணி என்கிற பெயரில் தான் துவக்கிய கட்சி மூலமும் தனக்குக் கிடைத்த கனத்த அனுபவத்தால் சிவாஜி தன்னுடைய வாரிசுகள் அரசியலுக்குள் நுழைவதை விரும்பவே இல்லை. பொதுவுடமைக்கட்சியின் மூத்த தலைவரான ஆர்.என்.கே என்றழைக்கப்படும் ஆர். நல்லகண்ணு இயக்கத்தின் முக்கியப்பொறுப்புகளை வகித்தபோதும், அவருடைய குடும்பத்தினர் யாரையும் இயக்கத்தில் வலிந்து வரவழைக்கவில்லை. அதைப்போல மூத்த பொதுவுடமைத் தலைவரான பி.ராமமூர்த்தியிலிருந்து பலரை வாரிசு அரசியலிலிருந்து விலகி ஜனநாயகத்தைத் தன்னளவில் முன்னெடுத்தவர்களாக அடையாளப்படுத்த முடியும். பார்வர்டு கட்சியின் தமிழகப் பிரதிநிதியாகத் தனித்த செல்வாக்குடன் இருந்து மறைந்த பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தன்னுடைய குடும்பத்தினர் யாரையும் தன்னுடைய வாரிசாக அறிவிக்கவில்லை.

தமிழக ஆட்சியையே மாற்றிய இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் தன்னுடைய உயிரைக் கொடுத்த 63 பேருக்கும் அதிகமானவர்கள் 1965 - ல் உயிர் நீத்த சம்பவம் ஐ.நா, சபை வரை எதிரொலித்தாலும், உயிர் நீத்தவர்களின் வாரிசுகள் யாருமே அரசியலுக்குள் நுழையவில்லை. இதே தமிழகத்தில்தான் அரசியல் இயக்கங்களை தங்களுடைய குடும்ப நிறுவனங்களைப் போலவே நினைத்துத் தங்களுடைய வாரிசு களிடம் விட்டுவிட்டுப் போக விரும்புகிறவர்கள் அதிகரித்திருக் கிறார்கள். எப்படிப்பட்ட தலைவராக இருந்தாலும், அவர்களுடைய வாரிசுகளுக்கு மரியாதை கொடுங்கள். அதைவிடவும் ஜனநாயகத்திற்கு மதிப்புக் கொடுங்கள்!

செப்டெம்பர், 2018.

logo
Andhimazhai
www.andhimazhai.com